“இந்த மனசு யாருக்கு வரும்”.. ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்… வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்கள்….

நடிகர் அருண் விஜய் தனது 45 வது பிறந்த நாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பல சினிமா பிரபலங்கள் தனது பிறந்த நாளை 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் ஹோட்டலில் கொண்டாடுவது வழக்கம். ஆனால் பிரபல ஹீரோ அருண் விஜய் தனது பிறந்த நாளை உதவும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளோடு இணைந்து கொண்டாடியுள்ளார். இது மற்ற நடிகர்களுக்கு ஒரு உதாரணமாக உள்ளது.

   

வாரிசு நடிகர் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்திருந்தாலும், தற்பொழுது தனது திறமையினால் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் அருண் விஜய். இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இவர் தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்குவது, ரத்த தானம் செய்வது என தொடர்ந்து பல சேவைகளை செய்து கொண்டே வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘மாப்பிள்ளை’ படம் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து பாண்டவர் பூமி, இயற்கை, என்னை அறிந்தால், குற்றம் 23 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் ‘யானை’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை இவர் உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். குழந்தைகளுக்கு உணவை பரிமாறியும், தானும் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்த மாபெரும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டார். இதில் அவர் ரத்த தானமும் வழங்கியுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் அருண் விஜய்க்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.