இந்தியாவில் தந்தையை கொரோனாவுக்கு இழந்த இரு வாரத்தில் தாயையும் இழந்து கை குழந்தை ஒன்று அனாதையாக மாறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. நஞ்சுண்டி கவுடா (45) என்பவருக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் குழந்தை பிறக்கவில்லை.
அவர் மனைவி இறந்துவிட்ட பின்னர் மம்தா (31) என்ற பெண்ணை 9 ஆண்டுகளுக்கு முன்னர் கவுடா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
கவுடா – மம்தா தம்பதிக்கும் குழந்தை பிறக்காமல் இருந்த சூழலில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு பின்னர் மம்தா கர்ப்பமானார். இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கவுடா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இதனிடையில் சமீபத்தில் மம்தாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சைக்கும் பிரசவத்திற்கும் சேர்த்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் மம்தா நேற்று உயிரிழந்தார். இதையடுத்து கணவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே மம்தாவின் உடலும் தகனம் செய்யப்பட்டது.
பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் குழந்தை அனாதையாகியுள்ளது. இதனிடையில் மம்தாவின் சகோதரர் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.