கூலி தொழிலாளி ஒருவரின் வங்கி கணக்கில் 1 கோடி இருந்த சம்பவம் வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுடன் தொடர்பு இருப்பதாக தெலுங்கான போலீசார் டெல்லி சென்று ஆய்வை தொடர்ந்தனர். அப்போது, டெல்லியை சேர்ந்த தினக்கூலி தொழிலாளி ஒருவரின் வங்கி கணக்கை சோதனை செய்தபோது, அவரது வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய் பணம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட நபரை அழைத்து அதிகாரிகள் விசாரித்தபோது அவர்களுக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.
அப்போது, அந்த கூலி தொழிலாளியிடம் சம்மந்தப்பட்ட வங்கி கணக்கிற்கான பாஸ் புக், ஏடிஎம் உள்ளிட்ட எந்த ஆவணமும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சம்மந்தப்பட்ட வங்கி கணக்கை சீனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஓன்று பயன்படுத்தி வந்ததும்,.. லோன் ஆப் மோசடி அல்லது ஆன்லைன் சூதாட்ட மோசடிக்காக இந்த வங்கி கணக்கை அவர்கள் பயன்படுத்தி, அதன் மூலம் ஒரு கோடி வரை சேமித்துவைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த வங்கி கணக்கை பயன்படுத்துவதற்காக, அந்த தினக்கூலி தொழிலாளிக்கு அவர்கள் மாதம் 4 ஆயிரம் செலுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
ஆனால், தனது வங்கி கணக்கில் 1 கோடி ரூபாய் பணம் இருப்பதோ, அல்லது தவறான வழியில் தனது வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டு வரும் விவரமோ அந்த தினக்கூலி தொழிலாளிக்கு தெரியவில்லை. இது சம்மந்தப்பட்ட நபர்கள் குறித்து அவரிடம் விசாரித்தபோது, அந்த நபர்கள் குறித்து அவர் எந்த தகவலும் கூறவில்லை எனவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.