கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண்: 10 நாட்களுக்கு பின்னர் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பாதிப்பு காரணமாக மே 12ஆம் திகதி விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,

15ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனையில் இருந்து அவரது உடல் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே கிரிஜம்மாவின் மகன் ரமேஷும் கொரோனாவால் உயிரிழந்ததால் இருவரின் உடல்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

10 நாட்களுக்கு பின் கிரிஜம்மாவின் வீட்டில் நேற்று சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, அங்கு கிரிஜம்மா உயிருடன் வந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரித்ததில் கிரிஜம்மா சிகிச்சையில் இருக்கும்போது மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த வேறு ஒருவரின் உடல் இவரது உறவினர்களிடையே வழங்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டவர் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.