இந்தியாவில் பணக்கார குடும்பத்துக்கு மருமகளாக சென்ற இளம்பெண் திருமணமான சில மாதங்களில் வீட்டில் இருந்து அடித்து துரத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவை சேர்ந்தவர் ஷிகா பன்சல். இவருக்கும் அனுஜ் என்ற இளைஞனுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
அனுஜ் குடும்பம் நல்ல வசதியான குடும்பம் என கூறப்படுகிறது. ஷிகா குடும்பத்தார் சாதாரண நிலையில் இருந்தாலும் தங்கள் சக்தியை மீறி லட்சங்களில் செலவு செய்து மகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அனுஜ் வெள்ளி பொருட்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்வதாக அவர் குடும்பத்தார் திருமணம் ஆவதற்கு முன்னர் கூறினார்கள். ஆனால் எந்த தொழிலும் செய்யாமல் வேலைக்கும் செல்லாமல் அனுஜ் வீட்டில் வெறுமனே இருப்பவர் என்பதை திருமணத்துக்கு பின்னர் அறிந்த ஷிகா அதிர்ச்சியடைந்தார்.
ஏனெனில் வருங்கால கணவர் நல்ல உழைப்பாளியாக இருக்க வேண்டும் என அவர் கனவு கண்ட நிலையில் அதற்கு நேர்மாறாக அனுஜ் இருந்ததை சில நாட்களில் கண்டுபிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னர் அதிகளவு வரதட்சணை மற்றும் கார் கேட்டு ஷிகாவை கணவர் மற்றும் குடும்பத்தார் கொடுமைப்படுத்தினர். வீட்டு வேலைகளை இழுத்து போட்டு கொண்டு ஷிகா செய்தாலும், எந்த வேலையும் செய்யவில்லை என கூறி அடித்து உதைத்தனர்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷிகாவை இரக்கமின்றி வீட்டை விட்டு அவர்கள் அடித்து துரத்தியிருக்கிறார்கள். இதனால் செய்வதறியாது தவித்தார் ஷிகா, அவரின் நிலையை பார்த்து இரக்கப்பட்ட அக்கம்பக்கத்தில் இருந்த குடும்பம் தங்கள் வீட்டில் அவரை அமர வைத்து ஷிகா பெற்றோருக்கு போன் செய்தனர்.
பின்னர் அவர்கள் அதிர்ச்சியடைந்து அங்கு வந்து ஷிகாவை அழைத்து சென்றதோடு இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.