பெற்றோர், தாத்தா. பாட்டி என 4 உயிரை குடித்த கொரோனா : 12 நாட்களில் அனாதையான பெண் குழந்தைகள்!!

இந்தியாவில் 12 நாட்களில் அடுத்தடுத்து கொரோனாவால் பெற்றோர், தாத்தா-பாட்டி என நான்கு பேர் பலியாகி தற்போது இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தாத்தா-பாட்டி, அம்மா, அப்பா என நான்கு பேருடன் 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் வாழ்ந்து வந்துள்ளனர்.

   

ஏப்ரல் மாதம் அக்குடும்பத்தில் தாத்தா துர்கேஷ் பிரசாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருந்து உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தில் உள்ள மற்ற 3 பெரியவர்கள் அதாவது குழந்தைகளின் பாட்டிக்கும், அப்பா அஸ்வினுக்கும், அம்மாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

ஏப்ரல் 27ம் திகதி உடல்நிலை மோசமானதால் தாத்தா துர்கேஷ் பிரசாத் உயிரிழந்துள்ளார். ஒரு வாரம் கழித்து அவருடைய மகன் அதவாது குழந்தைகளின் தந்தை அஸ்வின் இறந்துள்ளார்.

பின் சில நாட்கள் கழித்து பாட்டியும் பலியாகியுள்ளார். மே 7ம் திகதி குழந்தைகளின் அம்மாவும் உயிரிழக்க இரண்டு பெண் குழந்தைகளும் அனாதையாகியுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களை உலுக்கியுள்ளது. சரியான மருத்துவ வசதிகள் இல்லாதே நான்கு பேர் மரணத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது அனாதையான இரண்டு பெண் குழந்தைகளும் உத்தர பிரதேசத்தில் Bareilly-ல் உள்ள அத்தை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.