விருந்துக்கு சென்று கொரோனா வாங்கிய புதுப் பெண்கள்: பின் ஏற்பட்ட அவலம் !!

கொரோனா விழிப்புணர்வு இன்றி உறவினர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றுவந்த புதுமணப்பெண்கள் இருவர் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தினரிடையே சோகத்தை உண்டாக்கி உள்ளது. உயிரைக் கொல்லும் கொரோனா திருமண விருந்து விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி என்ற 19 வயது இளம்பெண்ணுக்கும் தண்டூர் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று சமூக இடைவெளியின்றி உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது.

   

இந்நிலையில் உறவினர் வீடுகளுக்கு எல்லாம் விருந்துக்கு சென்றுவந்த புதுமண தம்பதி கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் அங்குள்ள கோவில் ஒன்றுக்கு சென்று அபிஷேகம் செய்து விட்டு இருவரும் ஜோடியாக வீடு திரும்பியிருக்கின்றனர். இதன் பின்னர் இருவரும் வீடு திரும்பிய நிலையில் புதுமணப்பெண் ஸ்ரீவானி திடீரென மயக்கம் அடைந்து தரையில் சாய்ந்தார். அவர் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஸ்ரீவாணி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணப் பந்தலைக் கழற்றும் முன்பாகவே அதே பந்தலை இளம்பெண்ணின் இறுதி சடங்கிற்கும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதால், குடும்பத்தினர் மட்டுமல்லாது அப்பகுதி மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே உயிரிழந்த ஸ்ரீவானிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் ஸ்ரீவானிக்கு திருமணத்திற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததாகவும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம் பார்த்தசாரதி புரத்தைச் சேர்ந்த விஜயாவிற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த மாத இறுதியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வழக்கம் போல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றுவந்தனர்.இந்நிலையில் விஜயாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார்.

இருப்பினும் புதுப்பெண் விஜயாவின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் திருமணம் முடிந்தது இருபது நாட்கள் கூட ஆகாத நிலையில் புதுப் பெண் விஜயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரக் கூடிய நிலையில், திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அரசு பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடித்து திருமண விழாவில் குறைந்த அளவு நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென தெரிவித்தாலும், அரசின் நிபந்தனைகளை மீறி அரசையும் அதிகாரிகளையும் ஏமாற்றி கொரோனா விழிப்புணர்வின்றி உறவினர்கள் நண்பர்கள் கூட்டத்துடன் திருமணம் செய்து கொள்வதே இதுபோன்ற விபரீத உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றது என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.

புது மணப்பெண்கள் இருவர் திருமணமான ஓரிரு வாரங்களிலேயே மரணமடைந்த சம்பவத்தால் , மாப்பிளை வீட்டாருக்கு மட்டுமல்ல மணமக்களுக்கு விருந்து வைத்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.