வெளிநாட்டில் 3 வயது சிறுமியின் அசாத்திய திறமை! 196 நாடுகளின் தலைநகரங்களை சொல்லி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிறுமி

சார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில், கே.பி.என். மகேஷ் கிருஷ்ணன் என்பவர் மனைவி திவ்யா சொர்ணம் மற்றும் மகள் காதம்பரியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியினர் சென்னையை சேர்ந்தவர்கள். இந்நிலையில், 3 வயதே ஆன சுட்டிக்குழந்தை காதம்பரி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அசத்தி வருகிறார். மகளின் அறிவாற்றலை கண்டு வியப்படைந்துபோன மகேஷ் கிருஷ்ணன் கூறுகையில், தனது மகளை நர்சரி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றால் கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டது.

   

இதனால் வீட்டிலேயே தனது மகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுக்க வேண்டும் என திட்டமிட்டேன். மேலும் டி.வி.யாக இருந்தாலும், கம்ப்யூட்டர் ஆக இருந்தாலும் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் பார்க்க அனுமதிப்பதில்லை. ஏதாவது உடற்பயிற்சி, வெளியில் விளையாடுவது உள்ளிட்டவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்தினேன். குறிப்பாக என் மகளுக்கு நாடுகளின் தலைநகர் தொடர்பாக ஆரம்பத்தில் 10 முதல் 20 வரை சொல்லிக் கொடுத்தேன். பின்னர் இந்த தலைநகரங்களை சொல்வதில் காதம்பரி அதிக ஆர்வம் காட்டினாள்.

இதனால் படிப்படியாக 196 நாடுகளின் தலைநகர்களை சொல்லக்கூடிய திறமையை பெற்றாள். எந்த ஒரு நாட்டின் தலைநகரத்தை கேட்டாலும் சட்டென பதில் சொல்லக்கூடிய அளவுக்கு திறமையை பெற்றுள்ளாள். இதுமட்டுமல்லாமல் இறைவனது திருநாமங்களை சொல்லும் சுலோகங்கள், திருக்குறள் உள்ளிட்ட பலவற்றையும் கூறி வருகிறார். அவரது இந்த சாதனையானது உலக அளவில் தெரிய வேண்டும். இதற்காக கின்னஸ் சாதனை உள்ளிட்ட சர்வதேச அளவிலான சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என கூறியுள்ளார்.