மைசூரை சேர்ந்த ஹெப்பாலின் சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் கடந்த 30 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நிலை உருவாகவே இல்லை.
இந்நிலையில், ஜெயம்மாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாததால், அவரது கணவர், ஜெயம்மா 30 வயதில் இருக்கும்போதே விட்டுசென்று விட்டார். இதன்பிறகும், அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா ஜெயம்மாவை காதலித்து வந்தார். ‘
ஆனால், அவரின் காதலை ஜெயம்மா ஏற்கவில்லை. தனது காதலை ஏற்காததால் ஜெயம்மாவை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் சிக்கண்ணா. இந்த நிலையில், சிக்கண்ணாவின் காதலை ஏற்று, அவரை திருமணம் செய்ய சம்மதித்தார் ஜெயம்மா.
இதனை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சாலுவராயசுவாமி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீனிவாஸ் குருஜியின் ஆசிரமத்தில் இந்த அபூர்வ ஜோடியின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
65 வயதுடைய சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் புது மணமக்களாக புது வஸ்திரம் உடுத்தி ஜொலித்தனர். இருவருக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் மூலம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, காதலர்கள் திருமணத்தில் இணைந்தனர்.
மாண்டியா மாவட்டத்தின் மேல் கோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த அபூர்வ திருமண விழாவை கண்டுகளித்தனர். புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் வாழ அந்த ஊர் மக்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.