
நடிகர் மாரிமுத்து
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
பின் பல படங்களில் நடித்து வந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார். இந்நிலையில் நேற்று காலை எதிர்நீச்சல் தொடரின் டப்பிங் பணியில் மாரிமுத்து ஈடுபட்ட போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நிறைவேறாத ஆசை
அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாரிமுத்து, பல விஷயங்களை பகிர்ந்தார். அதில் அவர் கூறியதாவது, எனக்கு திருமணமாகி 27 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தான் வசித்து வந்த நிலையில், தற்போது நான் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளேன் என்றார்.
எல்லாருக்கும் சொந்த வீடு என்பது அது ஒரு கனவு மாதிரி தான். அதுவும் மற்ற ஊரிலிருந்து சென்னை வந்து வாழ்பவர்களுக்கு சொந்த வீடு பெரிய கனவு போன்று தான் இருக்கும் எனவும் என்னுடைய கனவு நிறைவேறி விட்டது எனவும் கூறினார். அந்த வகையில் தற்போது மணப்பாக்கம் பக்கத்தில் வீடு வாங்கி, அந்த வீட்டிற்கு என்னுடைய மனைவி பெயரை வைத்துள்ளேன் என்றார். ஆனால் இப்படி ஆசை ஆசையாய் அவர் வாங்கிய வீட்டிற்குள் அவரால் செல்ல முடியாமல் போனது எல்லோருக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது.