தாகத்திற்கு நீர் அருந்த சென்று மாயமான 13 வயது சிறுமி.. 6 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிசவுரா கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியே புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 25 அன்று சிறுமியும் அவரது சகோதரியும் தாயாருடன் சேர்ந்து வயலில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், சிறுமிக்கு தாகமெடுக்கவே, அருகாமையில் உள்ள குடியிருப்பு ஒன்றில், குடிக்க நீர் கேட்டு சென்றுள்ளார். இதனிடையே, வெகுநேரமாகியும் சிறுமி திரும்பாதது கண்டு, அவரது குடும்பத்தினர் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனையடுத்து, 28ம் திகதி அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என கூறி புகார் அளித்துள்ளனர். பொலிசாரும் மாயமான சிறுமியை தீவிரமாக தேடியும், அவர்களாலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், குறித்த சிறுமி வேலை பார்த்த வயல்வெளிக்கு 100மீற்றர் தொலைவில் சடலம் ஒன்றை மறைவு செய்த்தை நேரில் பார்த்ததாக உள்ளூர் நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தகவல் அளித்துள்ளார். உடனடியாக விரைந்து வந்த பொலிசார், ஊர் மக்கள் அடையாளம் காட்டிய பகுதியில் தோண்டியுள்ளனர்.

அதில் 6 நாட்களாக மாயமானதாக கூறப்படும் சிறுமியின் சடலம் காணப்பட்டது. சடலத்தை மீட்ட பொலிசார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமிக்கு பேச்சு குறைபாடு இருந்தது என்றும், அதனாலையே அவர் ஆபத்தில் சிக்கியும் தங்களால் அறிந்து கொள்ள முடியாமல் போனது என தந்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தந்தையும் மகனும் குடியிருப்பதாகவும்,

அதில் தந்தையை இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், அவரது மகன் தலைமறைவாகியுள்ளதால் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்திருக்கலாம் என்றே பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாயமான இளைஞரை விரைவில் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.