
நகைச்சுவை மன்னனாக வலம் வந்த நடிகர் கவுண்டமணி முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தால் அவர்களையே மிஞ்சும் அளவிற்கு கவுண்டர்களை போடுவார். அந்த அளவிற்கு நகைச்சுவையில் உச்சம் தொட்டவர் என்றே கூறலாம்.
இந்நிலையில் கவுண்டமணி, கடந்த 1996-ஆம் வருடத்தில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் நிலத்தை வாங்கி 22,700 சதுரடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி தர வேண்டும் என்று ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
கட்டுமான பணிகளுக்காக 3 கோடியே 58 லட்ச ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 1996-ஆம் வருடத்திலிருந்து 1999-ஆம் வருடம் வரை கவுண்டமணி சுமார் 1 கோடியே 4 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார். ஆனால், 2003-ஆம் ஆண்டு வரை கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.
இதனால், கவுண்டமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையில் , 46 லட்சத்து 51 ஆயிரம் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டது, வழக்கறிஞர் அறிக்கை வாயிலாக தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, கவுண்டமணியிடம் பெறப்பட்ட 5 கிரவுண்ட் (454 சதுர அடி) நிலத்தை அவரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
2008-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் சொத்து ஒப்படைக்கப்படும் வரை, மாதம் 1 லட்சம் வீதம் கவுண்டமணி, அவரின் மனைவி சி.எம் சாந்தி, மகள்கள் சி.எம். செல்வி, சி.எம். சுமித்ரா ஆகியோருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. 2019-ஆம் வருடத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, 2021-ஆம் வருடத்தில் ஸ்ரீ அபிராமி பவுண்டேசன் மேல் முறையீடு செய்தது. தற்போது அந்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.