விஜயலட்சுமி சில்க் ஸ்மிதாவானது எப்படி…? கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்ட கதை…!

ஆந்திராவில் உள்ள எலுரூ மாவட்டத்தின் சிறிய குக்கிராமத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. 14 வயதிலேயே பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லாத விஜய் லெட்சுமிக்கு திருமண வாழ்க்கை சிறிதும் பிடிக்கவில்லை. நடிகை சாவித்திரி, சுஜாதா போன்று சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடு வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்.

அன்றைய காலகட்டத்தில் வெள்ளை நிற நடிகைகளுக்கு தான் மவுசு. மாநிறமாக இருந்த அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே நடிகை அபர்ணாவிடம் ஒப்பனை கலைஞராக  வேலைக்கு சேர்ந்து விட்டார். அப்போது, நடிகர் வினு சக்கரவர்த்தி, அவரை பார்த்தவுடன் தனக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதை உணர்ந்தார்.

   

எனவே, தன் மனைவியிடம் கூறி விஜயலட்சுமிக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளை கற்பிக்க வைத்தார். தான் கதை எழுதி வந்த வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தை விஜயலட்சுமியை மனதில் வைத்து தான் எழுதினார். மலையாளத் திரையுலகில் விஜயலட்சுமிக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பிறகு, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இணையைத் தேடி என்ற திரைப்படத்தில் நடிகை சோபாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்ததால், அந்த கதாபாத்திரத்தில் விஜயலட்சுமியை நடிக்க வைத்தனர்.

அதே காலகட்டத்தில், வினு சக்கரவர்த்தியின் வண்டிச்சக்கரம் திரைப்படமும் வெளியானது. திரைப்படத்தில் சாராயம் விற்பனை செய்யும் பெண்ணாக நடித்த விஜயலட்சுமியின் பெயர் சில்க். படத்திற்காக அவரின் பெயரை ஸ்மிதா என்று மாற்றி இருந்தனர். எனவே, பின்னாளில் அவர் சில்க் ஸ்மிதா என்று அழைக்கப்பட்டார்.

திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வா மச்சான் வா என்ற பாடலுக்காகவே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. முதல் திரைப்படத்திலேயே தன் அழகால் ரசிகர்களை இழுத்து விட்டார். அதன் பிறகு மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தது.

அதன் பிறகு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் பாரதிராஜா அவருக்கு குணசித்திர வேடத்தை கொடுத்தார். முதல் முறையாக, தன்னை குணசித்ர வேடத்தில் நடிக்க வைத்தவர் என்பதால் சில்கின் விருப்பமான இயக்குனர் பாரதிராஜா தான். அதற்கு அடுத்த ஆண்டில் மூன்றாம் பிறை திரைப்படத்தில் இயக்குனர் பாலு மகேந்திரா, மற்றொரு சிறப்பான வேடத்தை அவருக்கு கொடுத்தார்.

80-களில் சில்க் இல்லாத திரைப்படமே இல்லை என்ற அளவிற்கு பிரபலமானார். ஆசை நாயகி, ஒரு பாடலில் நடனம் என்று எந்த வேடமாக இருந்தாலும் அவர் வந்தாலே ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். சில்க் ஸ்மிதா என்ற பெயரை போதும் என்ற அளவிற்கு பெரிய அளவில் கொடிகட்டி பறந்தார்.

படப்பிடிப்பு தளங்களில் கால் மேல் கால் போட்டே இருப்பார். யாருக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுப்பதில்லை. எனக்கு இப்படி உட்காருவது தான் வசதியாக உள்ளது. யாருக்கும் போலியாக மரியாதை கொடுக்க விரும்பவில்லை என்று அசால்டாக பதில் கூறுவார். அவரின் ஒரு கண்ணசைவே போதும் ரசிகர்கள் மயங்கிவிடுவார்கள்.

எனினும் மறுபக்கம் அவரின் வாழ்க்கை சோகம் நிறைந்தது. திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்து வெளியேறிய அவரை அவர் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. பணம், புகழ் தேடி வந்த பின்பே அவரை தேடி வந்தார்கள். அதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அவரின் பணத்தை குடும்பமும், கவர்ச்சியை ரசிகர்களும் கொண்டாடினர். உண்மையான அன்பு என்பது அவருக்கு இறுதிவரை கிடைக்காமல் போனது. இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்டதன் மூலம் தன் சோகம் மற்றும் இளமையை இழந்த தோற்றத்தை யாரும் பார்க்கக்கூடாது என்பதில் வெற்றி அடைந்து விட்டார். அவரின் வெற்றியே தற்போது வரை இளமை பெருக்குடன் அவரை நினைவுபடுத்துகிறது. இன்று அவருக்கு 63 வது பிறந்தநாள்.