
காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி ஆகிய மிகச்சிறந்த படைப்புகளை தந்த இயக்குனர் மணிகண்டன் அந்த இரண்டு படங்களுக்காகவும் தேசிய விருதுகளை பெற்றவர். உசிலம்பட்டியை சேர்ந்த இவர், சென்னையில் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். எனவே, எப்போதாவது தான் உசிலம்பட்டியில் இருக்கும் தன் வீட்டிற்கு செல்வாராம்.
இந்நிலையில் மணிகண்டனின் வீடு எப்போதும் அடைத்து கிடப்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், கடந்த எட்டாம் தேதி அன்று இரவு நேரத்தில் அவரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மற்றும் ஐந்து பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.
அது மட்டுமல்லாமல் அவர் வாங்கிய இரண்டு தேசிய விருது பதக்கங்களையும் திருடி விட்டார்கள். இந்த சம்பவம் தொடர்பில் உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இயக்குனர் மணிகண்டன் வீட்டு வாசலில் பை ஒன்று இருந்துள்ளது.
அதில், அவரின் தேசிய விருது வெள்ளிப் பதக்கங்களும், கடிதம் ஒன்றும் இருந்துள்ளது. அதில், “அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதியிருக்கிறார்கள். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் தேசிய பதக்கங்களையும் கடிதத்தையும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.