இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை : நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கிராமம் : எப்படி சாத்தியமானது தெரியுமா?

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அங்கிருக்கும் கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இந்தியாவின் நிலையைக் கண்டு உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.

   

முதல் அலையின் போது, இந்தியா தப்பித்துவிட்டதால், அதை சாதரணமாக கையாண்டதன் விளைவே இப்போது இந்தியா அனுபவித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில், ஒரிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கரஞ்சாரா கிராமம், கொரோனாவை எதிர்கொள்ளத் திணறிக் கொண்டிருக்கும் நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது.

இந்த கிராமத்தில் 261 வீடுகளும், சுமார் 1,234 மக்களும் வசித்து வருகின்றனர். கொரோனா முதல் அலையின் போதும் சரி, தற்போதும் சரி இங்கு ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

இதுவரை கிராமத்தில் உள்ள யாருக்கும் கொரோனா அறிகுறிகள் பதிவாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் 32 கிராமவாசிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனையை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்கும் கொரோனா நெகடிவ் என்றே முடிவுகளே வந்தன.

இதனால், மாநில அரசின் கொள்கையின்படி, தற்போது இந்த கிராமத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

இங்கு கொரோனா பரவல் இல்லாததற்கு முக்கிய காரணம், கொரோனா பற்றிய விழிப்புணர்வு தான், இந்த கிராமத்தில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஆஷா சுகாதார ஊழியர்களின் பங்கு முக்கியமானது.

இக்கிராமத்தில் கொரோனா பரிசோதனை, விழிப்புணர்வு ஆகியவற்றை ஆஷா சுகாதார ஊழியர்களே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஏற்படுத்தி விழிப்புணர்வு பணிகள் காரணமாகவே கொரோனாவை இந்த கிரமம் எளிதில் வென்றுள்ளது.

இந்த கிராமத்தை கஞ்சம் மாவட்ட கலெக்டர் விஜய் குலங்கே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆய்வு செய்தார். அதன் பின் அவர் கூறுகையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கிராமவாசிகள் மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது முறையாக மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்றுகிறார்கள்.

இங்குள்ள கிராமவாசிகள் முடிந்த வரை வீடுகளிலேயே இருக்கின்றனர். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மும்பையில் வேலை செய்கின்றனர்.

கடந்த ஆண்டு ஊரடங்கின்போதும், கிராமத்திற்குத் திரும்பிய இளைஞர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக 2020 முதலே கொரோனா வைரசை இந்த சின்னஞ்சிறிய கிரமம் தள்ளியே வைத்துள்ளதாக கூறியுள்ளார்.