காதலியின் குரலை கேட்க மாதக்கணக்கில் காத்திருந்த சுந்தர் பிச்சை! கூகிள் தமிழரின் அழகிய காதல் கதை

வெற்றி அதை கனவாக காண்பவர்களுக்கும் அதற்காக முயற்சி மேற்கொள்பவர்களுக்கும் சாத்தியப்படும் ஒன்று என நிரூபித்தவர்களில் ஒருவர் கூகிள் தமிழரான சுந்தர் பிச்சை.  கோடிகள் ஊதியமாக பெறும் சுந்தர் பிச்சையின் வெற்றிகளின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார். தமிழகத்தின் சென்னை மாநகரின் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தற்போது உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றின் தலைமை பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சையின் அழகிய காதல் கதையின் கதாநாயகி தான் அஞ்சலி.

   

காரக்பூர் ஐ.ஐ.டி.யில் ஒன்றாக பயின்ற காலம் முதல் தொடங்கிய காதலானது திருமணம் முடிந்தும் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ.ஐ.டியில் பெண்களுக்கான விடுதியில் சென்று அஞ்சலியிடம் தமது காதலை வெளிப்படுத்த சுந்தர் பிச்சை பயப்பட்டதாகவும், இந்த விவகாரத்தை தமது நண்பர்கள் இப்போதும் கூறி கிண்டலடிப்பதாகவும் சுந்தர் பிச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்னர் 1995 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் எம்.எஸ் பயில சென்றபோது அஞ்சலி இந்தியாவில் இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில் தமது காதலியின் குரல் கேட்க மாதக்கணக்கில் சுந்தர் பிச்சை காத்திருந்துள்ளார். அங்கிருந்து இந்தியாவில் இருக்கும் காதலிக்கு தொலைபேசியில் அழைக்க அவரிடம் பணம் இல்லை என்பதை அவரே தமது வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்தார்.

அஞ்சலியும் தமது காதலனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக பல மாதங்கள் வரை காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அஞ்சலி பிச்சை தற்போது ஆண்டுக்கு $103,166 ஊதியமாக பெறுகிறார். சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் சுமார் 200 மில்லியன் டொலர். உலகின் முக்கிய நிறுவனங்களில் இருந்தும் சுந்தர் பிச்சைக்கு பல மடங்கு ஊதியத்துடன் வாய்ப்பு அமைந்தாலும், கூகிள் நிறுவனத்தில் தொடர்வதே மனைவி அஞ்சலியின் விருப்பம் என சுந்தர் பிச்சை வெளிப்படுத்தியுள்ளார்.