செய்தியை வாசித்து முடித்ததும் கதறி அழுத செய்தி வாசிப்பாளர்.. காரணத்தை கேட்டு நெகிழ்ந்த ஒட்டுமொத்த அலுவலகம்!!

இன்றைய சூழலில் எல்லாருக்கும் எல்லாமும் எளிதில் இங்குக் கிடைத்து விடுவது இல்லை. தங்களுக்கான இடத்தையும், உரிமையையும் பெறப் பல தடைகளையும், பல இன்னல்களையும் சந்தித்துத் தான் தனக்கான இடத்திற்கு வர வேண்டியுள்ளது. அப்படிச் சாதித்து வந்தவர் தான் தாஷ்னுவா அனன் ஷிஷிர். கடந்த திங்களன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்று செய்தி தொகுப்பாளராக வங்கதேச செய்தி ஊடகத்தில் செய்தி வாசித்து அசத்தினார். அவர் ஒரு திருநங்கை.

   

வங்காள மொழி செய்தி தொலைக்காட்சியான போய்சாக்கி நியூஸ் சேனனில் நேரலையில் செய்தியை வாசித்துள்ளார் தாஷ்னுவா. அண்மையில் நடைபெற்ற ஆடிஷன் மூலம் தேர்வான அவர் பலகட்ட பயிற்சிக்குப் பின்னர் இதனைச் சிறப்பாகச் செய்துள்ளார். செய்தியை வசித்து முடித்ததும், அந்த ஸ்டூடியோவிலேயே கதறி அழுதார் தாஷ்னுவா. அவர் திடீரென அழுததைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் பதறிப் போனார்கள். பின்னர் தான், அது ஆனந்தத்தில் வந்த கண்ணீர் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

இந்த உணர்ச்சிகரமான நிகழ்வு குறித்துப் பேசிய தாஷ்னுவா, ”நான் வளரும் போது பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளேன். என்னை இந்த சமூகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் சந்தித்த அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதோடு பல நிராகரிப்புகளும் சேர்ந்து கொண்டது. ஆனால் இன்று எனது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள். இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன். இந்த சமூகம் எங்களைப் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றும் என உறுதியாக நம்புகிறேன்” எனக் கண்ணில் வடிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தவாறு பேசினார் தாஷ்னுவா.