ராகுல் காந்தியைப் பார்த்து துள்ளிக் குதித்து கதறி அழுத மாணவி… கல்லூரியில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி ஒருநாள் பயணமாக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். இதற்கான சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். புதுச்சேரி சென்ற ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன்.

   

மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று பேசினார். இதனைத் தொடர்ந்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு சென்று மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது ‘நீங்கள் என்னை சார் என்று கூப்பிட வேண்டாம். கல்லூரி முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் அண்ணா என்று கூப்பிடுங்கள்’ என்றார். இதனை அடுத்து மாணவிகள் ராகுல் அண்ணா என்று அழைத்து கலந்துரையாடினார்கள்.

அப்போது கல்லூரி மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஓடி வந்தார். உடனே அந்த மாணவிக்கு பேப்பரில் தனது கையெழுத்திட்டு ராகுல் காந்தி கொடுத்தார். ஆனால் ராகுல் காந்தியை அருகில் பார்த்த மகிழ்ச்சியில் அந்த மாணவி ‘ராகுல் அண்ணா…’ என அழைத்து உணர்ச்சியில் துள்ளிக் குதித்து கண்கலங்கினார். இதனை அடுத்து அந்த மாணவியை ராகுல் காந்தி ஆசுவாசப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.