தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்குகின்றனர். மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியிருந்தார்.
அப்போதே, வடிவேலு விஜயகாந்தை மோசமாக பேசியதை பார்த்த பலரும் முகம் சுளித்தார்கள். கொடுத்த காசுக்கு மேலேயே கூவுகிறார் வடிவேலு, என்ன இருந்தாலும் இப்படி எல்லாம் அந்த மனுஷனை தரக்குறைவாக பேசக் கூடாது என்று பலரும் தெரிவித்தனர். இந்நிலையில், அண்மையில் சென்னையில் நடந்த நண்பேன்டா வாட்ஸ்அப் குழுவின் நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வடிவேலு தன் கெரியரை பற்றி பேசி கண் கலங்கினார்.
நீங்கள் எல்லாம் ஓராண்டு தான் லாக்டவுனில் இருந்தீர்கள், ஆனால் நானோ கடந்த 10 ஆண்டுகளாகவே லாக்டவுனில் தான் இருக்கிறேன் என ஏற்கனவே தெரிவித்தார். இந்நிலையில் விஜயகாந்தை அவரின் வீட்டில் சந்தித்து தான் பேசிய பேச்சுக்காக வடிவேலு மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்தில் வடிவேலு நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் எம் மகன் படம் புகழ் திருமுருகன் இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்கப் போகிறாராம்.