பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு இலங்கை பிரபலங்கள் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மலையாள திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படம் ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கேஎஸ் ரவிக்குமார் பெற்றார் என்பதும் இப்படத்தை அவருடைய உதவி இயக்குனர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கவுள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் தர்ஷன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் தர்ஷன் ஜோடியாக பிக்பாஸ் புகழ் லொஸ்லியா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஒரே படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லொஸ்லியா ஜோடியாக நடிக்க இணைந்திருப்பது இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும், இப்படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, யூடியூப் பிரபலம் ராகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.