
மும்பையில் கிரிஷா என்ற 16 வயது சிறுமி சுமார் 110 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து அசாத்திய சாதனை படைத்திருக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக அவரின் குடும்பத்தினர் பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் ஆன்மிக குருக்களும் பிற மக்களும் கலந்து கொண்டனர்.
அவர்கள், சில சாதுக்களால் மட்டுமே செய்து முடிக்கக்கூடிய சாதனையை இவர் செய்திருப்பது அசாதாரணம் என்று பாராட்டியிருக்கிறார்கள். இது குறித்து சிறுமியின் தாயான ரூபா ஷா தெரிவித்ததாவது, கிரிசா ஜூலை மாதம் 11ஆம் தேதியிலிருந்து விரதம் இருக்க தொடங்கினார். முதலில் 16 தினங்கள் மட்டும் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தீர்மானித்தோம்.
அந்த சமயத்தில், அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. எனவே, அவளின் ஆன்மீக குரு முனி பத்மகலாஸ் மகராஜிடம் அனுமதி வாங்கி 110 தினங்களுக்கு உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்தார். காலை 9 மணியிலிருந்து மாலை ஆறு முப்பது மணி வரைக்கும் வெந்நீர் மட்டும் குடிப்பாள்.
110 தினங்களில் அவளின் எடை 18 கிலோ குறைந்துவிட்டது என்று தெரிவித்தார். மேலும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்ததாவது, கிரிஷா உண்ணாவிரதத்தை ஆரம்பித்த பின் மனவலிமை பெறுவதற்காக மத நூல்களையும் பிரார்த்தனைகளையும் கடைப்பிடித்தார். மனதை ஒருமைப்பாட்டுடன் வைத்திருந்ததால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பது இவரின் செயல்பாட்டில் தெரிந்து விட்டது என்றார்கள்.