
உலகில் எந்தெந்த மூலைகளிலிருந்தோ பல மனிதர்கள் ஒவ்வொரு நாளும் பல வகைகளில் சாதனைகள் புரிந்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலரின் அசாத்திய சாதனைகள் குறித்த வீடியோக்கள் வெளிவந்து நம்மை ஆச்சரியமடைய செய்கிறது. அதிலும் சிறு வயது குழந்தைகள் உலக சாதனை படைப்பது என்பது அரிதாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.
ஆனால், பிறந்து நான்கு மாதங்களே ஆன குழந்தை உலக சாதனை படைத்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆந்திராவைச் சேர்ந்த ஹேமா என்பவரின் நான்கு மாத குழந்தை காய்வல்யா. அந்த குழந்தை 120-க்கும் அதிகமான வெவ்வேறு விலங்குகள், பறவைகள், காய்கறிகள் மற்றும் பொருட்களை அடையாளம் கண்டு நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
அதனை வீடியோவாக எடுத்த ஹேமா, நோபில் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கமிட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நோபில் உலக சாதனை குழுவினர், குழந்தையின் அபாரமான நினைவுத்திறன் மற்றும் அடையாளம் கண்டு கொள்ளும் திறமையை பாராட்டி சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
அதாவது, பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தை 1000-க்கும் அதிகமான புகைப்படங்களை கண்டுபிடிப்பது என்பது இது தான் முதல் முறையாகும். எனவே, அந்த குழந்தைக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கமிட்டி சான்றிதழ் வழங்கியிருக்கிறது. தற்போது உலக சாதனை பெற்றதற்காக அளித்த பதக்கத்தை கழுத்தில் மாட்டியவாறு இருக்கும் குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது