
சென்னையில் கன மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் நடிகர் விஷால், சென்னை நகர மேயர் பிரியா அவர்களுக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு கூறி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, சென்னையில் மழை பெய்தால் மின்சாரம் துண்டிக்கப்படும் தண்ணீர் தேங்கி நிற்கும். அதன் பிறகு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நான் அண்ணா நகரில் இருக்கிறேன். இங்கே வீடுகளுக்குள் ஒரு அடி தண்ணீர் இருக்கிறது.
இதற்கு அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவி செய்ய வேண்டும். இதற்கு முன்பு 2015ல் இப்படித்தான் வெள்ளம் வந்தது. எட்டு வருடம் கழித்தும் அதே நிலை தான் இருக்கிறது. தண்ணீர் சேகரிக்கும் திட்டம் என்ன ஆனது? மேயர் பிரியா அவர்களுக்கு கேட்கிறேன்.
இது அரசியல் சம்பந்தப்பட்டதோ, நடிகராகவோ கேட்கவில்லை. பொதுமக்களுக்காக கேட்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் அவரை கலாய்த்து வருகிறார்கள். அதாவது, குடிச்சா பேசாம போய் படுங்க.. என்றெல்லாம் சிலர் முகநூல் தளத்தில் விஷாலை தாக்கி வருகிறார்கள்.