தெலுங்கானா முதல்வரையே இழுத்த ரோட்டுக்கடை ருசி… பிரச்சனையில் சிக்கிய குமாரி ஆன்டி கடை… மீண்டு வந்தது எப்படி…?

ஹைதராபாத்தில் ஐடிசி கோகினூர் எதிர்புறத்தில் குமாரி என்ற பெண் ரோட்டு கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். இவரின் கடையில், சைவம், அசைவம் என்று அனைத்து உணவுகளும் தரமாக இருப்பதாக இணையதளங்களில் பிரபலங்களால் வைரல் ஆக்கப்பட்டது. கறிக்குழம்பு, கோழி ஈரல் வறுவல், கோழிக்குழம்பு, சாதம், சாம்பார், ரசம், புளிசாதம், தயிர்சாதம், பொரியல், அப்பளம், என்று பல வகை உணவுகள் அங்கு கிடைக்கிறது.

   

இணையதளங்கள் மூலம் பிரபலமானதால், இவரின் கடைக்கு ஏராளமான கூட்டம் வரத் தொடங்கியது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் உண்டானது. மேலும் அந்த கடைக்கு செல்பவர்கள் அருகருகே வாகனங்களை நிறுத்தியதால் கடும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து காவல்துறையினர் குமாரியின் கடையை சீல் வைத்து வாகனத்தை கைப்பற்றியதோடு அவர் மீது வழக்கு பதிவு செய்துவிட்டனர்.

இந்த சம்பவம் இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் என்று பலரும் குமாரிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்பாக பேசப்பட்ட இச்சம்பவம் முதல்வர் ரேவந்த் ரெட்டி காதுகளுக்கு சென்றது.

அவர் உடனடியாக கடையை திறக்க வேண்டும் என்றும் வாகனம் நிறுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இது மட்டுமல்லாமல் முதல்வர் குமாரியின் கடைக்கு சென்று அங்கு சாப்பிட உள்ளார் என்றும் முதல்வர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

தற்போது, குமாரி தங்களுக்கு ஆதரவு தெரிவித்த அரசு மற்றும் முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றி என்று கூறி இருக்கிறார். நாங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து கொண்டு இருக்கிறோம். போக்குவரத்திற்கு இடையூறு உண்டாகாத விதத்தில் நடந்து கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.