
தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் மேக்னீஃபை கிளாஸ் மூலம் சூரிய ஒளியில் படம் வரைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். உலகிலேயே முதல்முறையாக இந்த முயற்சியை கையில் எடுத்துக்காட்டிய இளைஞர் இவர்தான். பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் தெரிவித்திருப்பதாவது, முதன் முதலில் பெரியார் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்கள் இருவரின் புகைப்படத்தையும் மேக்னீஃபை கிளாஸை பயன்படுத்தி வரைந்தேன்.
அதனை அமெரிக்காவை சேர்ந்த தமிழர் ஒருவர் ஒரு வரைபடத்திற்கு 80 ஆயிரம் என்று இரண்டு படத்தையும் வாங்கிக் கொண்டார். அதில் கலைஞர் ஐயாவின் வரைபடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பரிசளித்தார். அதனைத்தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் லோகோ, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ஆர்யா ஆகிய வரைபடங்களை சூரிய ஒளியில் மேக்னீஃபை கிளாஸ் பயன்படுத்தி வரைந்தேன்.
உலகிலேயே நான் தான் இந்த முறையில் வரையும் முதல் நபர். இதில், ஒரு புறம் இருந்து பார்த்தால் யானையும், மற்றொருபுறம் இருந்து பார்த்தால் காளையும் தெரியும் வகையில் இருக்கும் வரைபடத்தை நான் வரைய தொடங்கிய போது மழைக்காலம். ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே வெயில் கிடைத்தது.
எனவே அந்தப் படத்தை வரைந்து முடிப்பதற்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. காகிதத்தில் பென்சிலை வைத்து வரையும் போது அதில் ஒரு உராய்வு ஏற்படுகிறது. ஆனால் மேக்னீஃபை கிளாசை பயன்படுத்தி வரையும் போது மிகவும் கடினமாக இருக்கும். சூரிய ஒளியின் படும் திசையை வைத்து வரைவது தொடக்கத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது.
கைகளில் நடுக்கம் ஏற்பட்டது. தோள்பட்டை கடுமையாக வலித்தது. அதன் பிறகு தொடர்ந்து பயிற்சி எடுத்து அவற்றை சரி செய்து கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.