
திரையுலகில் குறைந்த சம்பளங்களை பெற்றுக் கொண்டு ஓரிரு காட்சிகளில் நடிக்கும் பல நடிகர்கள் அதன் பிறகு காணாமல் போகிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எனவே, அது போன்ற நடிகர்களை கருத்தில் கொண்டு கேப்டன் விஜயகாந்த், விவேக் போன்றவர்கள் தங்கள் திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தனர்.
அந்த வகையில், ரன் திரைப்படத்தில் இடம்பெறும் விவேக்கின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு நகைச்சுவை காட்சியில் நடிகர் விவேக் ஐந்து ரூபாய் கொடுத்து காக்கா பிரியாணி வாங்கி சாப்பிடுவார்.
அதன் பிறகு, அவருக்கு காக்காவின் குரல் வந்துவிடும். அப்போது, வழியில் சென்று கொண்டிருக்கும் ஒரு நபரிடம் அவர் கேட்கும்போது, அவர் “காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னி கிருஷ்ணன் குரலா வரும்” என்று கேட்பார். அந்த நகைச்சுவை மூலம் பிரபலமான நடிகர் கோபால், அதன் பிறகு பெரிய அளவில் வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாத வகையில் கண்ணாடி மற்றும் கோட் சூட் அணிந்து வித்தியாசமாக அவர் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.