
இந்த உலகில் கடவுள் இருக்கிறார் என்று ஒரு சாரரும் மற்றொரு சாரார் கடவுளே இல்லை என்றும் கூறிவருவது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. பல திரைப்படங்களில் கடவுள் பக்தி குறித்து அதிகம் காண்பிக்கப்பட்டாலும் சில திரைப்படங்களில் பகுத்தறிவு குறித்த காட்சிகள் நம்மை சிந்திக்க வைத்துவிடுகிறது.
அதற்கு உதாரணமாக பழைய திரைப்படம் ஒன்றில் மணிவண்ணன் கடவுள் வந்து பேசுவது போல் அற்புதமான வசனம் ஒன்றை பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, உலகம் தோன்றிய காலகட்டத்திலிருந்து மனிதனே கட்டிய கோவில், அவனே உருவாக்கிய சிலை, மனிதனே உருவாக்கிய மணி, கற்பூரம், மந்திரத்தை வைத்து பூஜை செய்து கொண்டு கடவுளே என்னை காப்பாற்று என்று கூறினால் நான் எப்படி காப்பாற்ற முடியும்?
மனிதர்களுக்கு நான் என்ன கொடுக்கவில்லை? ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு என்று அனைத்தையும் கொடுத்தேன். காய்கறிகள், மர வகைகள் அவற்றை பார்ப்பதற்கு கண்கள், மூக்கு, காது அதனை பயன்படுத்துவதற்கும், அதனால் வரும் பிரச்னையை தீர்ப்பதற்கும் தான் மூளையை கொடுத்தேன். அந்த மூளையை உபயோகப்படுத்துவதே இல்லை. உழைத்து சாப்பிடுவதற்கு தான் இரண்டு கைகளை கொடுத்தேன்.
அத்தனையும் வைத்துக்கொண்டு கடவுளே என் பிரச்சினையை தீர்த்து விடு என்று கூறினால், நான் எப்படி தீர்க்க முடியும்? கடவுளே என்று என்னை 24 மணி நேரமும் வணங்கி கொண்டிருப்பவன் நெல்லை கொண்டு போய் பாறையில் போட்டால், நான் விளைய வைக்கவா போகிறேன்?
அதேபோல் கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசும் ஒருவன் நெல்லை வயலில் விளைய வைத்தால் அவனுக்கு விளைய விடாமல் தடுக்கவா போகிறேன்? கடவுள் மனிதர்களுக்கு பிரச்சினைகளை கொடுப்பதும் இல்லை. அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதும் இல்லை.
அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொண்டால், கடவுளே தேவையில்லை. சும்மா இருக்கும் கோயில்களை பயன்படுத்தி கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றைக் கட்டினால் அறிவாவது வளரும் என்று பேசியிருக்கிறார்.
View this post on Instagram