
மிகச்சிறந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர். நேரில் வர முடியாத நடிகர்கள் சிலர் தற்போது அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் புகழ் கேப்டன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார். அவர் தெரிவித்ததாவது, நான் விஜயகாந்தின் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவிட்டு தான் சென்றேன். இப்போது மீண்டும் இங்கு வந்ததற்கு காரணம் உள்ளது.
சாப்பாட்டிற்காக கஷ்டப்படும் மக்களுக்கு விஜயகாந்த் உதவி செய்திருக்கிறார் என்று பலர் கூறியதை கேட்டுள்ளேன். சென்னைக்கு வந்த சமயத்தில் 50 கிராம் பக்கோடா தான் என் சாப்பாடு. ரொம்பவும் கஷ்டப்பட்டேன். மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பசி என்று வந்தவர்களுக்கு சாப்பாடு வழங்கியிருக்கிறார்.
அதேபோல், நானும் இன்று முதல் பசி என்று வருபவர்களுக்கு தினந்தோறும் கே கே நகரில் இருக்கும் என் அலுவலகத்தில் உணவு வழங்கப் போகிறேன். என்னால் முடிந்தவரை செய்யப் போகிறேன். முதலில் 50 பேருடன் தொடங்க உள்ளேன். அதற்காக விஜயகாந்த் அவர்களிடம் ஆசிர்வாதம் பெறவே இங்கு வந்தேன்.
உணவின்றி பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும் கேகே நகரில் இருக்கும் என் அலுவலகத்திற்கு வாருங்கள். எல்லோருக்கும் சாப்பாடு உண்டு. என் வாழ்நாள் முழுக்க இதை நான் செய்யப் போகிறேன். உங்களின் அருகில் இருக்கும் யாரேனும் பசி என்று கூறினால் உடனடியாக உணவு வாங்கி கொடுங்கள். ஏனெனில் பசி மிகவும் கொடுமை. அந்த கஷ்டம் எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.