மனைவியுடன் கேப்டன் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன்… புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை…!

மிகச்சிறந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், தொண்டர்கள், பொது மக்கள் என்று பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

அதன்பிறகு, அவரின் உடல் எடுத்து செல்லப்பட்ட வழியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். எனினும், பல முன்னணி கதாநாயகர்கள் நேரில் வரவில்லை. வெளிநாடுகளில் படப்பிடிப்புகளில் இருப்பதாக கூறிவிட்டனர். இந்நிலையில், தற்போது நடிகர்கள் ஒவ்வொருவராக கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

   

அந்த வகையில், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் கேப்டனின் சமாதி இருக்கும் இடத்திற்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் விஜயகாந்த் அவர்களின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு கேப்டனின் மனைவி மற்றும் மகன்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு கேப்டன் புகைப்படத்தை வணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.