
தமிழ் திரையுலகில் நகைச்சுவையில் உச்சம் தொட்ட நாயகனாக கலக்கி வந்தவர் வைகை புயல் வடிவேலு. அவரின் நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களே கிடையாது என்ற அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். எந்த சூழ்நிலையிலும் அவரின் நகைச்சுவை பொருந்தும் அளவிற்கு அமைந்துவிடும்.
கேலி கிண்டலாக பேசுவதற்கும் அவரின் நகைச்சுவை டயலாக்குகள் தான் பயன்படுகிறது. அந்த அளவிற்கு புகழின் உச்சியில் இருந்தார் வடிவேலு. ஆனால் சமீப வருடங்களாக வடிவேலு நடித்த எந்த திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் வடிவேலு குறித்த எதிர்மறையான கருத்துக்களும், பேட்டிகளும் தான் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வடிவேலு சென்றிருக்கிறார். அதன் பிறகு அவர், இது சமாதி கிடையாது சன்னதி. நான் கலைஞரின் தீவிர பக்தன் என்று கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக வடிவேலுவை களம் இறக்கலாமா? என்று ஆலோசனை செய்யப்படுவதாக கூறப்பட்டது.
அதற்கு வடிவேலுவும் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.