
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராகவும் தேமுதிக நிறுவன தலைவராகவும் இருந்த நடிகர் விஜயகாந்த் இன்று காலையில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தொண்டர்களும், ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் விஷால், கேப்டன் விஜயகாந்தின் மரணத்திற்கு கண்ணீருடன் இரங்கல் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கேப்டன் விஜயகாந்த் மரணம் அடைந்ததாக அறிந்தேன். இந்த சமயத்தில் உங்கள் அருகில் இருந்து உங்களின் முகத்தை ஒரு முறை பார்த்து உங்கள் காலை தொட்டு கும்பிட்டு இருக்க வேண்டும்.
நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் எங்களைப் போல ஆட்கள் நல்லது செய்வது சாதாரண கிடையாது. உங்களிடமிருந்து தான் அதை தெரிந்து கொண்டேன். உங்கள் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு சோறு போட்டு அனுப்புவீர்கள். நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியோ, அரசியல்வாதியோ என்பதை காட்டிலும் ஒரு மிகச் சிறந்த மனிதர் இறந்துவிட்டார் என்பதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு மனிதராக பெயர் பெறுவது சுலபம் கிடையாது. சிலருக்கு மட்டுமே அந்த பெயர் நீடிக்கும். என்னை மன்னித்து விடுங்கள், அண்ணே! சத்தியமாக சொல்கிறேன். நான் உங்களின் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.