
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக கடந்த மாதம் 28ஆம் தேதி அன்று மரணமடைந்தார். அவரின் மறைவு செய்தி, திரையுலக நட்சத்திரங்களையும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது. முன்னணி நடிகராகவும், சிறந்த அரசியல் தலைவராகவும் திகழ்ந்த கேப்டன் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரிடமும் அன்பாகவும் எதார்த்தமாகவும் பழகியவர்.
வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்து வரும் கேப்டனை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனாலும் ஏதோ சில காரணங்களால் முன் பகை காரணமாக வடிவேலு திமுகவில் இணைந்து கேப்டன் விஜயகாந்த் குறித்து கிண்டல் மற்றும் கேலி செய்து மேடைகளில் பேசி வந்தார். பலமுறை தன்னை பற்றி தவறாக பேசிய வடிவேலுவை ஒரு முறை கூட கேப்டன் தவறாக கூறவில்லை.
இந்நிலையில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் இளவரசு பேட்டி ஒன்றில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் குறித்து பேசி இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, எங்கள் ஆசான் திரைப்படத்தில் அவருடன் நடித்தேன். அப்போது, அவரிடம் அரசியல் எப்படி இருக்கு அண்ணா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், அது பெரிய எரிச்சல்ப்பா, மண்டையை பிச்சிக்கிட்டு இருக்கு என்றார். மேலும், எனக்கு ரொம்ப கோபமாக இருந்தால் வடிவேலுவின் நகைச்சுவைகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அப்படியே தூங்கி விடுவேன் என்றார். என்ன இப்டி சொல்றீங்க? உங்கள பத்தி அவர் என்னலாம் பேசிகிட்டு இருக்காரு என்று கேட்டதற்கு, அவன் திட்டுனா திட்டட்டும். நான் வடிவேலு காமெடி பாத்துட்டு தான் தூங்குவேன் என்று கூறினார். அப்படி ஒரு மனிதர் அவர் என்று தெரிவித்திருக்கிறார்.