
தனக்கென வாழாது, பிறருக்கென வாழ்பவர்களாலேயே உலகம் நிலைத்திருக்கிறது. அவ்வாறு சுயநலம் இல்லாமல் பிறருக்காக பல உதவிகளை செய்து வாழ்ந்து மறைந்த பல தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில், நடிகரும், அரசியல் தலைவரும், மிகச் சிறந்த மனிதருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களும் ஒருவர்.
அவரின் மறைவு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது. அவரின் அலுவலகத்திற்கு சென்ற எவரும் பசியோடு திரும்பியதில்லை என்று பலரும் கூறுகிறார்கள். சமீப வருடங்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்த விஜயகாந்த் நேற்று காலையில் திடீரென மரணமடைந்ததாக செய்தி வெளியானது.
அவரின் மறைவு செய்தி ரசிகர்கள், தொண்டர்கள், மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று லட்சக்கணக்கான மக்கள் கடலலை போல திரண்டு வந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று இரவு நடிகர் விஜய், இயக்குனர்கள் பா.ரஞ்சித், சுந்தர்.சி, ஏ.ஆர் முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா போன்றோர் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். அதேபோன்று இன்று உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
மேலும், பல நகைச்சுவை நடிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். எனினும் இன்னும் சில முன்னணி கதாநாயகர்கள் கேப்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருப்பதால் அவரால் வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருடன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் அர்ஜூன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். எனவே, நேரில் வராத அஜித்குமார் இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் நடிகர் விக்ரமும் அஞ்சலி செலுத்த நேரில் வரவில்லை. நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருப்பதால் நேரடியாக அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.
அவர் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மேலும் நடிகர்கள் கார்த்தி, சிவகுமாரின் இருவரும் அஞ்சலி செலுத்த வரவில்லை. நடிகர் தனுஷின் சகோதரிக்கு மருத்துவம் படிப்பதற்காக விஜயகாந்த் சீட்டு வாங்கி கொடுத்ததாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தனுஷும் படப்பிடிப்பில் இருப்பதாக கூறி அஞ்சலி செலுத்த வரவில்லை. தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டு இருந்தார்.
நடிகர் சிம்புவும் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதால் அவராலும் வர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார். அவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. அவரும் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனினும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்த வராத முன்னணி கதாநாயகர்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.