
நடிகர் மன்சூர் அலிகான், திரிஷா பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியது, பெரும் சர்ச்சையாக வெடித்தது. பிரபலங்கள் பலரும் அவருக்கு எதிர்ப்புகள் தெரிவித்துக் கொண்டிருந்தனர். எனினும், தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த மன்சூர் அலிகான், இன்று த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது நடிகர் மன்சூர் அலிகானுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏழு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. கடந்த 1996 ஆம் வருடத்தில் சினேகா ஷர்மா என்பவர் மன்சூர் அலிகான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
அந்த பெண்ணிற்கு அப்போது 23 வயது. மன்சூர் அலிகான் அடிக்கடி தனக்கு துன்புறுத்தல் கொடுத்ததாகவும், ஒரு முறை ஜுஸில் மருந்து கலந்து கொடுத்து வன்கொடுமை செய்ததாகவும் புகார் தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த 1998 ஆம் வருடத்தில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. அந்த சமயத்தில், புகார் அளித்திருந்த சினேகா சர்மாவிற்கு குழந்தை பிறந்தது. அதன் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகானுக்கு ஏழு வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. மேலும் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும் அவர் அதிக காலம் சிறையில் இருக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அவருக்கு தண்டனை காலம் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக சினேகா சர்மாவிற்கு 3.5 லட்சம் ரூபாயும், அந்த பெண் குழந்தைக்கு 7 லட்சம் ரூபாயும் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன் பிறகு, சினேகா சர்மாவிற்கு 1994 ஆம் வருடத்தில் திருமணம் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரின் கணவர் தன் மனைவி மற்றும் குழந்தையை தன்னோடு சேர்த்து வைக்குமாறு வழக்கு கொடுத்திருந்ததும் தெரிய வந்தது. எனவே, சினேகா சர்மா மீது மன்சூர் அலிகான் அவமதிப்பு வழக்கு போட்டார்.
எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய சினேகா சர்மா ஐம்பது லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். எனினும், அதன் பிறகு சினேகா சர்மா தரப்பில் எந்தவித பதிலும் தரப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.