
நடிகர் முரளி, வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அத்திரைப்படத்தில் வரும் பேருந்திற்கு முக்கிய இடம் உண்டு. படம் முழுவதும் நகைச்சுவை காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ராதா அதன் பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
நீண்ட நாட்களுக்கு பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பைரவி என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை ராதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. டேவிட் ராஜ் என்பவர் கொடுத்த அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, என் மகன் பிரான்சிஸ் ரிச்சர்ட்ஸ் கடந்த 14ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் சாலி கிராமத்திற்கு அருகில் சென்ற போது ராதாவும் அவரின் மகன் தருணும் சேர்ந்து என் மகனை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.
இருவர் மீதும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விசாரணையில், நடிகை ராதா தன் மகனுடன் சாலையில் சென்ற போது பிரான்சிஸ் ரிச்சர்ட்ஸ் அவரை கேலி செய்ததாகவும், அதன் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், சில நாட்களுக்கு முன்பு ரிச்சர்ட்ஸின் உறவினர், நடிகை ராதாவின் வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவை உடைத்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டிருக்கிறது. இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.