
இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்படங்கள் பெரும்பாலும் நண்பர்களை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டிருக்கும். கலகலப்பாக படம் முழுக்க ஜாலியான கதாபாத்திரங்களை வைத்து எடுத்திருப்பார். நண்பர்கள், காதல் இரண்டையும் இணைத்து நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
எனவே, இயக்குனர் வெங்கட் பிரபு திரைப்படங்கள் என்றாலே இளம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். பல ஹிட் படங்களை கொடுத்து, பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கட் பிரபு குறித்து மறைந்த பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி மேடை ஒன்றில் பேசிய பழைய வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், வெங்கட் பிரபு குறித்து கலகலப்பாக வாலி பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, புதுமுக இயக்குனராக வெங்கட் பிரபு என்னிடம் வந்தான். படத்தின் பெயர் என்ன? என்று கேட்டபோது, எங்க ஏரியா உள்ள வராத என்று கூறினான். இப்டி பேரு வச்சா யாரும் படத்தை வாங்க வரமாட்டான் என்றேன்.
அதன்பிறகு, நான் தான் சென்னை-600028 என்று பெயர் வைக்க சொன்னேன். படம் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது. இன்று, வெங்கட் பிரபு காஸ்ட்லியான இயக்குனராக வளர்ந்து விட்டான். ஏன் இப்டி கூறிகிறேன் என்றால், நான் கேட்கும் அதிக சம்பளத்தை கொடுத்து என்னை அவன் படத்தில் பாடல் எழுத வைக்கிறானே! என்று கூறியிருக்கிறார்.