
இசையமைப்பாளர் இளையராஜா தன் இசை மூலம் பல வருடங்களாக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். அவரின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன் பாடல்களால் ரசிகர்களின் மனங்களில் குடிபுகுந்து விட்டார். இசை என்றாலே அது, இளையராஜா தான் என்ற அளவிற்கு மக்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக இசை மேதையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரின் இசைக்காகவே பல திரைப்படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. இதனிடையே அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதை திரைப்படம் தயாராகிறது. அத்திரைப்படத்தில், நடிகர் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்துவிட்டது.
இந்நிலையில், அத்திரைப்படத்தின் தொடக்க விழா நட்சத்திர ஓட்டலில் இன்று நடப்பதாக வலைப்பேச்சு அந்தணன் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கான விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜாவும் கலந்து கொண்டிருக்கிறார். இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்று விழாவை சிறப்பான முறையில் நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.