
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. கவுண்டர் அடிப்பதில் அவரை மிஞ்ச யாரும் இல்லை என்பது போல் தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளிலும் எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவார். அடுத்தவர்களை பங்கமாக கலாய்த்து சிரிக்க வைப்பதாக அவர் மீது விமர்சனங்களும் இருந்தது.
ஆனால் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில், அவர் மக்களுக்கு செய்யும் உதவிகள் பாராட்டுகளை பெற்றுள்ளது. முதியோர் இல்லங்களிலும், ஆதரவற்றோர் இல்லங்களிலும் உதவி செய்து வந்த பாலா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல உதவிகளை செய்தார்.
அது மட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி மக்களுக்கு பயன்பட இலவசமாக கொடுத்திருந்தார். இந்நிலையில், அதை விட ஒரு படி மேல சென்று, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு அவசர உதவி தேவைப்படும்போது, அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உடனே வீட்டிற்கு ஆட்டோ வந்துவிடும். இலவசமாக அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது, காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஏறி இந்த சேவை தொடங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து 2 இன்னும் 3 தினங்களில் 24 மணி நேர சேவை இருக்கும் என்று பாலா தெரிவித்திருக்கிறார்.
மேலும், இது முழுக்க முழுக்க தான் சம்பாதிச்சது என்றும் வேறு யார் பணமும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இவற்றை எல்லாம் பார்த்த ரசிகர்கள் கோடிகளில் சம்பளம் பெறும் நடிகர்களில் பலர் உதவி செய்யாமல் இருக்கும்போது, அதிலிருந்து பல மடங்கு குறைவாக சம்பளம் பெறும் பாலா இவ்வளவு உதவிகள் செய்வது நிச்சயம் பாராட்டுக்குரியது என்று புகழ்ந்து வருகிறார்கள்.