
நடிகர் அஜித் மற்றும் லைலா நடித்து, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் வருடத்தில் வெளிவந்த தீனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிற்கு இது தான் முதல் திரைப்படம். தன் அறிமுக திரைப்படத்திலேயே இயக்குனராக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவிட்டார்.
இந்நிலையில், மறைந்த பாடலாசிரியர் கவிஞர் வாலி தீனா திரைப்படத்தில் பாடல்கள் எழுதிய போது நடந்த அனுபவம் குறித்து பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, வத்திக்குச்சி பத்திக்காதடா என்ற பாடலை எழுதி, அந்த வரிகளை படித்து காண்பித்தபோது இயக்குனர் எதுவுமே கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
எனக்கு கோபம் வந்துவிட்டது. நல்லா இருந்தா, நல்லா இருக்குன்னு சொல்லு. இல்லன்னா இல்லைன்னு சொல்லு. சும்மா உக்காந்திருக்க. செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி. புதிய இயக்குனர்கள்னாலே இப்டித்தான். நல்லா இல்லனா வேற வரிகளை எழுத போறேன்.
இது என்ன பைபிளா? மாத்த முடியாமல் இருப்பதற்கு? என்றேன். உடனே, அவர் இல்லை சார் திரைப்படத்தில் முழுவதும் அஜித் வாயில் வத்திக்குச்சியை பொருத்திக் கொண்டே வருவார். அது எப்படி உங்களுக்கு தெரிந்தது என்று ஆச்சரியமாக உள்ளது என்றார். நான் எதார்த்தமாக தான் எழுதினேன் என்று வாலி கூறியுள்ளார்.