
தற்போதெல்லாம் திரைப்படங்கள் வெளிவந்த முதல் நாளே வெற்றி படமா? தோல்வி படமா? என்று தெரிந்து விடுகிறது. படம் வெளியாகும் ஒரு சில நாட்களிலேயே வசூல் கோடிக்கணக்கில் குவிந்து படத்தின் வெற்றியை தீர்மானித்து விடுகிறது. மேலும் படம் வெளியான முதல் நாளிலேயே பல விமர்சகர்கள் இணையதளங்கள் மூலமாக படம் எப்படி இருக்கிறது? என்று கூறி விடுகிறார்கள்.
அதை பார்த்த பின்பு ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்கிறார்கள். ஆனால், அன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடுவது தான் வெற்றிக்கான அடையாளம். ஆனால், அதையும் தாண்டி ஒரு சில படங்கள் 365 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடி பெரிய சாதனையை பிடித்திருக்கிறது.
அப்படி ஓடிய ஒரு சில திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். இயக்குனர் பி.வாசு இயக்கி நடிகர் பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதாரவி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்து கடந்த 1991 ஆம் வருடத்தில் வெளிவந்த திரைப்படம் சின்னதம்பி. வெளி விவரங்களே தெரியாத கள்ளம் கபடமில்லாமல் வளரும் பிரபு, சிறகடித்து பறக்க நினைக்கும் குஷ்பூ இருவரும் சேர நினைக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளே படத்தின் கதை.
இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 365 நாட்கள் ஓடி இருக்கிறது. அதேபோல், இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகர்கள் கமல், ரஜினி மற்றும் ஸ்ரீதேவி நடித்து கடந்த 1976 ஆம் வருடத்தில் வெளிவந்த திரைப்படம் மூன்று முடிச்சு. ரஜினி வில்லனாக நடித்து புதுமையை காட்டி இருப்பார்.
இத்திரைப்படமும் 365 நாட்கள் தியேட்டரில் ஓடி இருக்கிறது. அதனை தொடர்ந்து இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்து 1982 ஆம் வருடத்தில் வெளியான மூன்றாம் பிறை திரைப்படம். அத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு பழைய நினைவுகள் மறந்து விடும். அவருக்கு கமல் அடைக்கலம் கொடுத்து, குழந்தையை போல் பார்த்துக் கொள்வார்.
இருவரும் படிப்படியாக காதலிக்க தொடங்கும் சமயத்தில், ஸ்ரீதேவிக்கு நினைவு திரும்பிவிடும். அவர் கமலை மறந்து விடுவார். அவரோடு பழகிய நாட்களையும், அவரையும் மறந்துவிட்டு ஸ்ரீதேவி பிரிந்து செல்லும்போது கிளைமாக்ஸ் காட்சியில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண்கலங்க செய்திருப்பார் கமல்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது அத்திரைப்படம். மேலும் இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறது. ஒரு வருடத்திற்கு மேல் அத்திரைப்படம் தியேட்டரில் ஓடியது. அதனைத்தொடர்ந்து, இயக்குனர் கங்கை அமரன் இயக்கி ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உட்பட பலர் நடித்து கடந்த 1989 ஆம் வருடத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படம்.
தற்போது வரை ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக அமைந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மக்களால் விரும்பப்படுகிறது. இத்திரைப்படம் வெளிவந்த திரையரங்குகள் அனைத்திலும் ஓராண்டிற்கு மேலாக ஓடி வசூலை குவித்தது.