
சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு ஆகியோர் நடிப்பில் கடந்த 2003-ஆம் வருடத்தில் வெளியான வின்னர் திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் தான். படம் முழுவதும் அவரின் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
கைப்புள்ள என்று அவரின் கதாபாத்திரம் தனித்துவமாக இருந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் சுந்தர்.சி அத்திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, வடிவேலுவிற்கு அந்த சமயத்தில் மார்க்கெட் இல்லை. அப்போது, நான் வின்னர் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரை அணுகினேன்.
அவரின் காலில் அடிபட்டிருந்ததால், அடிபட்டு இருக்கும்போது கூப்பிடுறீங்களே சார்? என்று கூறினார். உடனே, அத்திரைப்படத்தில் அவருக்கு அடிபட்டது போல், அவர் நொண்டிக்கொண்டு வரும் காட்சிகளை வைத்தேன். கதையின்படி முதல் பாதியில் மட்டுமே வடிவேலுவின் காட்சிகள் இருந்தது.
ஆனால், அதன் பிறகு கதையில் பல மாற்றங்களை கொண்டு வந்து, படம் முழுக்க அவர் வருவது போல் காண்பித்தோம். ஏனெனில், அந்த சமயத்தில் பிரசாந்த் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. எனவே, அவர் மட்டுமே வரும் இரண்டாம் பாதிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே, தான் ரவுடிகள் வரும் முக்கியமான சண்டை காட்சிகளில் கூட வடிவேலுவை வைத்து படம் முழுவதும் எடுத்து விட்டோம். முதலில் என் கதைப்படி வடிவேலுவின் காட்சிகள் குறைவு. அதன் பிறகு, மாற்றப்பட்ட அவரின் காட்சிகள் தான் தற்போது வரை பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.