உன்னத மனிதர் விஜயகாந்த்… மக்கள் கொண்டாடும் கேப்டனாக மாறியது எப்படி…? பிரபல இயக்குனர் தான் காரணம்..!

கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் தன் 71 வயதில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். ஒரு நல்ல நடிகராகவும், சிறந்த மனிதராகவும் விளங்கிய நடிகர் விஜயகாந்த் அரசியலிலும் சிறப்பான ஆளுமை பெற்றிருந்தார். எனவே, அவரின் மரணம், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

   

தனது திரைப்படங்கள் மூலம் சிறப்பான வசனங்களை பேசி மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை விதைத்தவர். இருபதுக்கும் அதிகமான படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். 1980 ஆம் வருடத்தில் திரைத்துறையில் காலடி வைத்த விஜயகாந்த், நடித்த கடைசி திரைப்படம் 2009 ஆம் வருடத்தில் வெளிவந்த எங்கள் ஆசான்.

சுமார் 152 திரைப்படங்களில் நடித்துவிட்டார் விஜயகாந்த். அவரின் நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அத்திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கியிருந்தார். அத்திரைப்படத்திற்கு பின்பு தான் விஜயகாந்த் கேப்டன் என்று பெயர் பெற்றார்.

விஜயகாந்த் என்று கூறினாலே பலரும் அவரைப் போன்று ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது என்றே  கூறுவார்கள். அந்த அளவிற்கு திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் பல உதவிகளை செய்த அவர் இன்று இம்மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார் என்பது மிகப்பெரிய சோகமே.