
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று திருச்சியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். தேமுதிக தலைவரான விஜயகாந்த், தற்போது உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். எனவே, அவர் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுக்க இருக்கும் அவரின் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு செய்து வருகிறார்கள்.
அதே போன்று, தளபதி விஜய்யின் ரசிகர்களும், விஜயகாந்திற்காக பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில், திருச்சிக்கு அருகே இருக்கும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு விஜயகாந்த் நலம் பெற வேண்டிக் கொண்டனர்.
இது மட்டுமல்லாமல், திருச்சியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பாக சிவன் மற்றும் பிரம்மபுரீஸ்வரருக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரில் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கியுள்ளனர். விஜயகாந்த்திற்காக, விஜய் ரசிகர் மன்றம் செய்த இந்த பிரார்த்தனை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், தான் சினிமாவில் வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த விஜயகாந்தை தற்போது வரை ஒரு முறைக்கூட விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.