
நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென்று இன்று காலையில் அவர் மரணமடைந்த செய்தி வெளியானதால் அவரின் தொண்டர்களும் ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விஜயகாந்த் தனது திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்தவர். இளம் கதாநாயகர்களை தன்னுடன் நடிக்க வைத்து முன்னணி நாயகர்களாக மாற்றிய மனிதரும் அவர் தான். அன்றைய காலகட்டத்தில், சிவாஜி கணேசன் செய்ததை அதன் பிறகு சிறப்புமிக்க செய்தவர் விஜயகாந்த்.
மேலும், இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் விஜயகாந்த் சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால், நீதி கிடைத்தது, பட்டணத்து ராஜாக்கள், வெற்றி, புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, குடும்பம், ஓம் சக்தி, சாட்சி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு 1993 ஆம் வருடத்தில் செந்தூரப் பாண்டி திரைப்படத்தில் விஜய்யை தன்னுடன் நடிக்க வைத்தார்.
அந்த படத்தை விஜய்யின் தந்தையான இயக்குனர் சந்திரசேகர் தான் இயக்கியிருந்தார். விஜய்க்காக அந்த திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். எனவே, அதற்காக அவர் சம்பளம் பெறவில்லை. அந்த திரைப்படம் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை பெற்று விஜய் இன்று முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு, நடிகர் சூர்யாவிற்கும் ஹிட் திரைப்படம் கொடுக்க உதவி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். தனது பெரிய அண்ணா திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தார். விஜய், சூர்யா மட்டுமல்லாமல் திரைத்துறையில் பல நடிகர்கள் வாழ்வில் உயர பெரும் உதவியாக விஜயகாந்த் இருந்திருக்கிறார். இன்று உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் சூர்யா இருவரும் கேப்டன் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என்றென்றும் கேப்டன் விஜயகாந்தை மறந்து விட மாட்டார்கள். நடிகர் சங்க தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார். அந்த சமயங்களில், நிகழ்ச்சிகளிலும் நடிகர்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளை உடனே தீர்த்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.