MGR, சிவாஜியின் ஆஸ்தான நாயகி… விஜயகுமார் மனைவி மஞ்சுளாவின் 10ம் ஆண்டு நினைவு நாள்… அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர்..

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி ஹீரோயினியாக நடித்து குணச்சித்திர நடிகையாக உருவெடுத்தவர் தான் நடிகை மஞ்சுளா. இரண்டு தலை முறை ஹீரோக்களுடன் நடித்த நடிகை என்ற புகழைப் பெற்றவர்.

   

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழி படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதல் முறையாக 1969 ஆம் ஆண்டு வெளியான சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடன் ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் நடித்தார். 1970களில் முன்னணி நடிகையாக பலம் வந்த மஞ்சுளா எம்ஜிஆரின் ஆஸ்தான நடிகையானார்.

அதனைப் போலவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

எம்ஜிஆர் மட்டுமல்லாமல் அப்போது ஹீரோக்களாக இருந்த முத்துராமன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தெலுங்கு மற்றும் கன்னடம் என சினிமா முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

ஜெயலலிதாவிற்கு பின்னர் எம்ஜிஆர் உடன் அதிக ஜோடி சேர்ந்த நடிகைகள் பட்டியலில் இவரும் ஒருவர். முதலில் கவர்ச்சியில் தாராளம் காட்டி வந்த மஞ்சுளா பின்னர் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்த ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

1975 ஆம் ஆண்டுக்கு பிறகு இளம் ஹீரோக்களாக இருந்த ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.

இவ்வாறு உச்ச நடிகையாக உருவெடுத்த காலத்தில் உன்னிடம் மயங்குகிறேன் என்ற திரைப்படத்தில் நடித்த போது விஜயகுமார் இடையே காதல் மலர்ந்தது.

விஜயகுமார் ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்தபோதும் மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மஞ்சுளா விஜயகுமார் தம்பதிகளுக்கு வனிதா, பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவருமே தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த மஞ்சுளா ஹீரோயின் வேடங்களை தவிர்த்து துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் இறுதியாக கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சமுத்திரம் என்ற திரைப்படத்திலும் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வாசு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து என் உள்ளம் உன்னை தேடுதே என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதுதான் அவரின் கடைசி படமாக அமைந்தது. அதன் பிறகு உடல் நல பாதிப்புக்கு உள்ளான மஞ்சுளா படுக்கையில் இருந்து தவறி விழுந்து மயங்கி நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் வயிற்று பகுதியில் ரத்தம் உறைந்த அதன் காரணமாக உயிரிழந்தார்.

தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் இரண்டு தலைமுறை ஹீரோக்களுடன் நடித்த மஞ்சுளாவின் 10ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அவரின் குடும்பத்தினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.