
திரையுலகில் பெரும்பாலும் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு சம்பளம் குறைவாக தான் இருக்கும். பெரிய அளவில் வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. எப்போதாவது திரைப்படங்கள் கிடைக்கும். அதில், சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார்கள்.
சினிமாவை நம்பி நடிக்க வந்த பல சிறிய நடிகர்களின் நிலைமை இதுதான். அவர்களை கருத்தில் கொண்டு தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். அது குறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் அரவிந்த் ராஜ் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். இவர் தற்போது, பாக்கியலட்சுமி தொடரில், கணேஷிற்கு தந்தையாக நடித்து வருகிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, விஜயகாந்த் திரைப்படங்களில் நீங்கள் பார்த்தால், அவரின் நண்பர்களாக நடிப்பவர்கள் அனைவருமே சிறிய நடிகர்களாகத்தான் இருப்பார்கள். குள்ளமணி, கருப்பு சுப்பையா, போன்றோரை தான் தன் நண்பர்களாக நடிக்க வைத்திருப்பார். அவரிடம், இவங்கள எப்படி சரி உங்க நண்பர்களாக போட முடியும்? என்று கேட்டால், அவர்கள் சினிமாவையே நம்பி வந்து விட்டார்கள்.
அவர்களை ஒரு திரைப்படத்தில் நடிக்க வைப்பதால் உங்களுக்கு எதுவும் கெட்டுப் போகாது. ஆனால், அவர்கள் வீட்டில் ஒருவேளை அடுப்பெரியும். அதை யோசியுங்கள் என்பார். மற்ற ஹீரோக்கள் எல்லாம் தன் தகுதி ஏற்றவர்களை நடிக்க வைக்க நினைப்பார்கள். ஆனால், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருடனும் நல்ல எண்ணத்துடன் பழகக் கூடியவர் கேப்டன் என்று தெரிவித்திருக்கிறார்.