
கடந்த 2013 ஆம் வருடத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. அதற்கு முன்பு, இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக அவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாராணி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தெறி, மெர்சல், பிகில், ஜவான் போன்ற அதிரடி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் தன் நிஜ பெயர் அருண்குமார் என்றும் தன் பெரியப்பா வழக்கறிஞர் என்பதால் அட்லீ என்று தனக்கு பெயர் வைத்ததாகவும் கூறியிருக்கிறார். இட்லி என்பது போல் அழைப்பதற்கு எளிதாக இருந்ததால் வீட்டில் அனைவரும் அட்லீ என்றே அழைத்தனர் என்று தெரிவித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் முதல் முதலில் தான் இயக்கிய குறும்படத்தில் அருண்குமார் என்று தான் தன் பெயரை குறிப்பிட்டிருக்கிறார். அவரின் தாயார் தான், அட்லீ என்று தானே உன்னை எல்லோரும் கூப்பிடுகிறோம் அந்த பெயரையே வைத்துக் கொள். அருண்குமார் என்று நிறைய பேர் இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.
உடனே, அட்லீ என்று தன் பெயரை அந்த குறும்படத்தில் போட்டிருக்கிறார். அந்த குறும்படம் விருதுகளை வென்று அடுத்தடுத்து படங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்ததால், சென்டிமெண்டாக அட்லீ என்ற பெயரே நிலைத்து விட்டது என்று தெரிவித்திருக்கிறார்.