
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் GOAT திரைப்படம் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, விஜய்யின் பிறந்தநாளான, ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, பொதுவாக விஜய்யின் திரைப்படங்கள் அதிகமான வசூல் சாதனையை நடத்தும். அதற்கு முக்கிய காரணம், அவரின் திரைப்படங்களை தொடர் விடுமுறை நாட்களில் வெளியிடுவார்கள். இதற்கு முன்பு, வந்த திரைப்படங்கள் எல்லாம் அப்படித்தான் இருந்தது. எனவே கோட் திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தை ஒட்டி வெளியிட முடிவெடுத்திருந்தனர்.
ஆனால் இந்தியளவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்திற்கான இரண்டாம் பாகமும் அதே நாளில் தான் வெளி வருகிறது. அது மட்டுமல்லாமல், அத்திரைப்படத்தை தமிழில் வெளியிடுவது ரெட் ஜெயன்ட் மூவிஸ். எனவே, கோட் திரைப்படம் அந்த சமயத்தில் வெளிவருவது கஷ்டம் தான் என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.