நெதர்லாந்தில் புதிய ஹோட்டலை தொடங்கி செஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்… வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்…

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. இவர் இந்திய அணியில் கடந்த 2005ம் ஆண்டில் அறிமுகமானார். அதிரடி வீரராக அறியப்படும் ரெய்னா 3 ஃபார்மெட்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

   

அவர் இதுவரை மொத்தம் 7,988 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 176 போட்டிகளில் விளையாடி 4,687 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வை அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தார்.

எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி 5ல் 4 முறை அந்த அணி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியபோது முக்கிய வீரராக ரெய்னா இருந்தார். 2021 சீசனுக்குப் பிறகு ரெய்னா சென்னை அணியில் இடம் பிடிக்கவில்லை.

தற்போது அவர் இந்தியா லெஜண்ட்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் போன்ற ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ‘ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவியுள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.