இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் சங்கர் மகாதேவன். இவர் தமிழில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற, ‘என்ன சொல்லப் போகிறாய்’, சங்கமம் படத்தில் ‘வராஹ நதிக்கரையோரம்’, ராவணன் படத்தில் ‘காட்டுச் சிறுக்கி’, உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் ‘வா தலைவா’ என்ற பாடலை பாடியுள்ளார். அதை தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்ற ‘வீர ராஜ வீர’ என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் பின்னணி பாடகாராக மட்டுமல்லாமல் ஆளவந்தான், யாவரும் நலம், விஸ்வரூபம் போன்ற பல படங்களுக்கு தனது நண்பர்கள் எசான், லாய் ஆகியோருடன் இணைந்து இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இடம் பெற்ற ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலுக்கு சிறந்த பாடகர் என்ற தேசிய விருதினை பெற்றார்.
தற்பொழுது பாடகர் ஷங்கர் மகாதேவனுக்கு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரப் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. இசை மற்றும் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்ததற்காக இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.